புழல் சிறை வாசலில் ரவுடி காரில் கடத்தல் - உறவினர்கள் 4 பேர் கைது!
சென்னை புழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடியைச் சிறை வாசலிலேயே காரில் கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பாகப் பெண் உள்பட 4 பேரை காவல் துறையினர் மாமல்லபுரத்தில் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை மற்றும் மாமூல் கேட்பதில் ஏற்பட்ட தகராறு வழக்கில் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி சதீஷ்குமார் என்பவர், நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டுச் சிறையிலிருந்து வெளியே வந்தார். அவர் வெளியே வந்த சில நிமிடங்களிலேயே, சிறை வாசலில் காத்திருந்த நால்வர் கொண்ட கும்பல் அவரை வலுக்கட்டாயமாகக் காரில் கடத்திச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளது.
அதே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலாஜி மற்றும் வினோத் ஆகிய இருவரின் உறவினர்களான பாலாஜி (33), வினோத் (55), தேன்மொழி (55) மற்றும் மோகனா (35) ஆகியோரே இந்த தாக்குதல் மற்றும் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
கடத்தல் கும்பல் காரை செங்குன்றம் அருகே நிறுத்தி விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தைப் பயன்படுத்தி, காரில் இருந்து சதீஷ்குமார் சாமர்த்தியமாகத் தப்பிச் சென்று காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் உடனடியாகக் களமிறங்கிய தனிப்படை போலீசார், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல் பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், கடத்தலில் ஈடுபட்ட 4 பேரும் மாமல்லபுரத்தில் பதுங்கியிருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், அங்குச் சென்று நால்வரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.