விஜய் அமைச்சரவையில் 4 பெண்களுக்கு வாய்ப்பு.. களமிறங்கும் ‘பெண் சிங்கங்கள்’!

 

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தமிழக அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மொத்தம் 4 பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே 10-ஆம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்றபோது, முதற்கட்டமாக 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதில், தவெக-வின் முக்கியப் பெண் முகமான கீர்த்தனாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, அவருக்குத் தொழில்துறை ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (மே 21, 2026) காலை 10 மணிக்கு சென்னை மக்கள் மாளிகையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட அமைச்சரவை விரிவாக்கப் பட்டியலில் மேலும் 3 பெண் எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளன. அதன்படி, இன்று கமலி.எஸ். – அவினாசி தொகுதி (தவெக), சி.விஜயலட்சுமி – குமாரபாளையம் தொகுதி (தவெக), கே.ஜெகதீஸ்வரி – ராஜபாளையம் தொகுதி (தவெக) ஆகிய நான்கு பேரும் புதிதாகப் பதவியேற்க உள்ளனர். 

இதன் மூலம் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட 33 பேர் கொண்ட ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாகப் பதவியேற்க உள்ள இந்த 3 பெண் அமைச்சர்களுக்கும் சமூக நலம், சத்துணவுத் திட்டம், ஆதிதிராவிடர் நலன் அல்லது கைத்தறி உள்ளிட்ட முக்கியத் துறைகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சரவையில் பெண்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருப்பது தவெக மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.