விநாயகர் சிலை கரைப்பின் போது மின்சாரம் பாய்ந்து 4 இளைஞர்கள் பலி - மத்தியப் பிரதேசத்தில் துயரம்!

 

மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்லா மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வின்போது நிகழ்ந்த கோர விபத்தில், மின்சாரம் பாய்ந்து நான்கு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மண்ட்லா மாவட்டம் ஹிராபூர் கிராமத்தில் விநாயகர் சிலை அமைப்பதற்காகப் பந்தல் ஒன்று போடப்பட்டிருந்தது. அங்கு வழிபாடுகள் முடிக்கப்பட்டுச் சிலைகள் நீர்நிலையில் கரைக்கப்பட்ட நிலையில், சிலை அமைப்புக் குழுவைச் சேர்ந்த 8 இளைஞர்கள் சோர்வு காரணமாக அந்தப் பந்தலிலேயே உறங்கத் தங்கியுள்ளனர்.

நேற்று பந்தலுக்கு மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பி அறுந்து, அங்குத் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது எதிர்பாராதவிதமாக விழுந்துள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் பலியானவர்கள் ஜைன் பான்வரே (19), ரவி ஜாரியா (24), கிருஷ்ணகுமார் பான்வரே (18) மற்றும் வீரேந்திர பான்வரே (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதற்கிடையே, மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் நடைபெற்ற மற்றொரு விபத்தில், விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்றபோது நீரில் மூழ்கி மேலும் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.