10 நாட்களில் 40 லட்சம் உறுப்பினர்கள்... அண்ணாமலையின் இயக்கத்தில் குவியும் மக்கள் - கிராமங்களில் சிறப்பு முகாம்!
தமிழக பாஜக-வின் முன்னாள் தலைவரான அண்ணாமலை தொடங்கியுள்ள 'வீ த லீடர்ஸ்' இயக்கத்தில், குறுகிய காலத்திற்குள் லட்சக்கணக்கான உறுப்பினர்களைச் சேர்க்கும் நோக்கில் அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசியல் களத்தில் தனக்கென ஒரு தனிப் பாதையை வகுத்துக்கொண்டு செயல்பட்டு வரும் அண்ணாமலை, அண்மையில் 'வீ த லீடர்ஸ்' என்ற புதிய சமூக இயக்கத்தைத் தொடங்கினார். இந்த இயக்கத்தை அடித்தட்டு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில், வெறும் 10 நாட்களில் 40 லட்சம் உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்ற மெகா இலக்குடன் அவரது ஆதரவாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்த இயக்கத்தில் இணைவதற்கு ஆன்லைன் வசதிகள் இருந்தாலும், தொழில்நுட்ப வசதி இல்லாத மற்றும் ஆன்லைன் மூலம் இணையத் தெரியாத கிராமப்புற எளிய மக்களுக்காகத் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது பெயர்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
அண்ணாமலையின் இந்த புதிய இயக்கத்தில் ஏற்கனவே தமிழக பாஜக-வில் முக்கியப் பொறுப்புகளில் வகித்த மூத்த நிர்வாகிகள் பலர் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக கரு.நாகராஜன், சுமதி வெங்கடேசன், அலிசா அப்துல்லா உள்ளிட்ட பல முன்னாள் பாஜக நிர்வாகிகள் மற்றும் முக்கிய முகங்கள் இந்த இயக்கத்தில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.