திருப்பதியில் ரூ.20 கோடி மதிப்பிலான 4,100 கிலோ கஞ்சா எரித்து அழிப்பு!
திருப்பதி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 4,100 கிலோ கஞ்சா, மாவட்ட ஆட்சியர் வெங்கடேஸ்வரர் மற்றும் எஸ்.பி. சுப்பாராயுடு முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.20 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா மண்டலம், துக்கிவாக்கத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2 முதல் 3 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 208 வழக்குகளில் சேகரிக்கப்பட்ட இந்த போதைப்பொருட்கள், நீதிமன்றத்தின் உரிய அனுமதியுடன் பாதுகாப்பான முறையில் எரிக்கப்பட்டன. இந்தச் சோதனையின் போது கடத்தல் குறித்த முக்கியத் தகவல்களை அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர்.
ஆந்திராவின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்திலிருந்து விசாகப்பட்டினம், காக்கிநாடா வழியாகத் திருப்பதிக்குக் கஞ்சா கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு மற்றும் கேரளா மாநிலங்களுக்குக் கடத்தத் திருப்பதி ஒரு முக்கிய 'இடைவழி' ஆகப் பயன்படுத்தப்படுகிறது. ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் கடத்தப்படுவதைத் தடுக்க மாவட்ட எஸ்.பி. தலைமையில் சிறப்புத் தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் பேரில், போதைப்பொருட்களை ஒழிக்கப் பல்வேறு அதிரடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கஞ்சா கடத்தலைத் தடுக்க ஐ.ஜி. அந்தஸ்திலான அதிகாரி தலைமையில் ஈகிள் தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சாவினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து இணையவழியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கஞ்சா பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் திருப்பதி மாவட்டத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட குற்றத்தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மாநிலத்திலேயே மிக அதிகமாகும்.
எதிர்காலத்தில் கஞ்சா கடத்துபவர்கள் மற்றும் அதற்கு ஒத்துழைப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.