கோவை அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி!

 

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்குத் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று மதியம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 30 சிறுவர்கள், 13 சிறுமிகள் என 43 பேருக்குத் திடீர் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. உடனடியாகப் பள்ளி நிர்வாகத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மாணவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 5 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் மாணவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மதியம் வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்திருக்கலாம் எனப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்குள் நுழைய முயன்றபோது, பள்ளி நிர்வாகத்திற்கும் அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து துணை ஆணையர் சரவணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்த கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உணவில் பல்லி விழுந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்தத் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சத்துணவு ஊழியர்களின் கவனக்குறைவு காரணமா என்பது விசாரணை முடிவில் தெரியவரும். இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்."

மாணவர்கள் அனைவரும் தற்போது நலமுடன் இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இரவு 9 மணி வரை அவர்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.