மாஸ்கோவை குறிவைத்து 430 ட்ரோன்கள் அதிரடி தாக்குதல்.. இரண்டு ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்!

 

உக்ரைன் படைகள் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைக் குறிவைத்து, இரவு முழுவதும் 430-க்கும் மேற்பட்ட ட்ரோன் விமானங்களை ஏவி உக்கிரமான தாக்குதலை நடத்தியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரஷ்யத் தலைநகர் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் இதுவென ரஷ்ய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உக்ரைனின் இந்தத் திடீர் தாக்குதல் குறித்து மாஸ்கோ நகர மேயர் செர்ஜி சோபியானின் தனது அறிக்கையில், அழிக்கப்பட்ட ட்ரோன்கள்: மாஸ்கோவை நோக்கி உக்ரைன் ஏவிய பெரும்பாலான ட்ரோன் விமானங்கள், நகர எல்லையைத் தொடுவதற்கு முன்பாகவே தொலைதூர அணுகுமுறைகளில் ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுச் செயலிழக்கச் செய்யப்பட்டன.

மாஸ்கோ நகரை நேரடியாகத் தாக்கும் நோக்கில் உள்ளே நுழைந்த 36 முக்கிய ட்ரோன் விமானங்கள் பாதுகாப்புப் படைகளால் முழுமையாக அரண் அமைத்து அழிக்கப்பட்டன.

இது குறித்து ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை ரஷ்யா முழுவதும் பரவலாகப் பறந்த 452 உக்ரேனிய ட்ரோன் விமானங்களை ரஷ்யப் படைகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளன. மேலும், உக்ரைனிடமிருந்து ரஷ்யா தனுடன் இணைத்துக் கொண்ட கிரிமியா பகுதியிலும் இந்த ட்ரோன் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.