4560 அடி உயரம்... நாளை கார்த்திகை தீபத்தன்று பர்வதமலை ஏற 1,200 பேருக்கு அனுமதி!
திருக்கார்த்திகை மகா தீபத் திருநாளையொட்டி, நாளை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பர்வதமலை மீது ஏறிச் சுவாமி தரிசனம் செய்ய மொத்தம் 1,200 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளை கார்த்திகை தீபத் திருநாளன்று காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை பர்வதமலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 900 வெளிமாநில மற்றும் வெளியூர் பக்தர்களும், 300 உள்ளூர் பக்தர்களும் என மொத்தம் 1,200 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.
கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஒரு மணி நேரத்திற்கு 150 பக்தர்கள் வீதம் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். வெளியூர் பக்தர்கள் parvathamalai.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து உரிய அனுமதியைப் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு இணையாக பக்தர்களால் போற்றப்படும் பர்வதமலையின் உச்சியில் மல்லிகார்ஜுனர் - பிரமராம்பிகை கோயில் அமைந்துள்ளது. சுமார் 4,560 அடி உயரம் கொண்ட இந்த மலைக்குச் செல்லக் கரடுமுரடான பாதைகள் மற்றும் செங்குத்தான படிகளைக் கடந்து செல்ல வேண்டியிருப்பதால், பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
மலை ஏறுவதற்கு 18 வயது முதல் 60 வயது வரை உள்ள பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் நடைபெற்ற முன்னேற்பாட்டு ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பர்வதமலை ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், நுரையீரல் பாதிப்பு, சுவாசப் பிரச்சினை, இதய நோய்கள், உயர் அல்லது குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் செங்குத்தான மலைப் பாதையில் ஏறுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம், சிவராத்திரி மற்றும் கார்த்திகை தீபத் திருநாட்களில் பர்வதமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். நாளை நடைபெறும் மகா தீபத் திருநாளையொட்டி வனத்துறை, காவல்துறை, மருத்துவக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து மலைப் பாதையில் பாதுகாப்பு மற்றும் அவசர உதவி ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றிப் பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.