தமிழகம் முழுவதும் சென்னை உதவி கமிஷனர்கள் உட்பட 46 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்!
தமிழகம் முழுவதும் 46 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணியிட மாற்ற உத்தரவை தமிழக டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் பிறப்பித்துள்ளார். இதில் சென்னை மற்றும் புறநகர் கமிஷனரகங்களில் பணியாற்றி வந்த சில உதவி கமிஷனர்களும் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனராக பணியாற்றி வந்த மகேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆவடி கமிஷனரகத்தில் குற்ற ஆவண காப்பக உதவி கமிஷனராக இருந்த முத்துராஜா, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவடி கமிஷனரக உளவுப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த மணிவண்ணன், காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஆவடி கமிஷனரகத்தின் பொன்னேரி உதவி கமிஷனராக தமிழ்வாணன் பொறுப்பேற்கிறார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த முகமது நாசர், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் டி.ஜி.பி. அலுவலகத்தின் தேர்தல் பிரிவு டி.எஸ்.பி. பொறுப்பையும் கவனிப்பார்.
மேலும், சென்னை ஐகோர்ட்டு உதவி கமிஷனராக பாலாஜி, தாம்பரம் கமிஷனரக மக்கள் தொடர்பு உதவி கமிஷனராக மகேஷ், ஆவடி கமிஷனரக நலப்பிரிவு உதவி கமிஷனராக சஞ்சீவ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அயனாவரம் உதவி கமிஷனராக இருந்த வேலு கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் பிரிவில் டி.எஸ்.பி.யாக ராஜலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் கமிஷனரக நலப்பிரிவு உதவி கமிஷனராக ஹரிசங்கரி பொறுப்பேற்கிறார்.