தமிழகத்தில் 460 டாஸ்மாக் கடைகள் மூடல்... ஊழியர்கள் திடீர் போராட்டம்; 3 பேர் பணியிடைநீக்கம்!
தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் நடத்திய திடீர் போராட்டத்தால், நேற்று 460 மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை.
தமிழகத்தில் மொத்தம் 4,040 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 460 கடைகள் மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி மதுபாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 வழங்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்காக மதுபாட்டிலின் விலையுடன் ரூ.10 சுற்றுச்சூழல் கட்டணமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. காலி பாட்டிலைத் திரும்ப வழங்கும்போது அந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால், பாட்டில்களைச் சேகரிப்பது, ஸ்கேன் செய்வது, பாதுகாப்பாக வைப்பது உள்ளிட்ட கூடுதல் பணிச்சுமை ஏற்படும் என்றும், அதற்குத் தேவையான இடவசதி மற்றும் பணியாளர்கள் இல்லை என்றும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஞாயிற்றுக்கிழமை பல மாவட்டங்களில் கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. கடைகளைத் திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 3 ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.