தமிழகம் முழுவதும் 24 மணி நேரத்தில் 467 ரவுடிகள் கைது - 6,540 பேருக்கு எச்சரிக்கை!

 

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை தீவிரமாகக் கண்காணிக்கவும் குற்றச் செயல்களைத் தடுக்கவும் முதல்வர் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, காவல் துறை சார்பாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 467 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் சூழலில், குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளுக்கு எதிராகத் தமிழகக் காவல் துறை இந்த நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில் 467 ரவுடிகள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றச் பின்னணி கொண்ட 6,540 ரவுடிகளைக் நேரில் அழைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நன்னடத்தை பிணைப் பத்திரம்: ரவுடிகள் குறித்தான தீவிர ஆய்வின் போது, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டோம் என 303 பேரிடம் நன்னடத்தை பிணைப் பத்திரம் பெறப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையிலும் காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் ரவுடிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 16 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நபர்கள் மற்றும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டம்-ஒழுங்கு விதிகளின்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

சட்டம்-ஒழுங்கு பராமரிப்பில் எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது என்ற முதல்வரின் கடுமையான அறிவுறுத்தலைத் தொடர்ந்து, காவல் துறையினரின் இந்த மின்னல் வேக அதிரடி நடவடிக்கை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.