சென்னையில் சாலை விபத்தில் 4 வயது சிறுவன் பலி - பொதுமக்கள் போராட்டம்!
Aug 7, 2026, 09:00 IST
சென்னை மாம்பாக்கம் - மேடவாக்கம் சாலையின் மோசமான நிலை காரணமாக ஏற்பட்ட விபத்தில் சுஷாந்த் என்ற 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலையில் நிலவிய மிக மோசமான குண்டும் குழியுமான பாதையால் கட்டுப்பாட்டை இழந்த வாகன விபத்தில், சிறுவன் சுஷாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணங்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவனின் உயிரிழப்பைக் கண்டித்தும், சீரமைக்கப்படாத சாலையைக் கண்டித்தும் பொன்மார் பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் திடீரெனச் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாம்பாக்கம் சாலையைச் சீரமைக்கக் கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.