கார் பந்தயத்தில் மரத்தின் மீது மோதி 5 சிறுவர்கள் உயிரிழப்பு.. பஞ்சாப்பில் சோகம்!

 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற சட்டவிரோதக் கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட கொடூர விபத்தில் 5 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பஞ்சாப் மாகாணத் தலைநகர் லாகூரில் உள்ள ஹார்பன்ஸ்புரா பகுதியில் நேற்று அதிகாலை வேளையில் சிறுவர்கள் சிலர் அபாயகரமான முறையில் கார் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 3 சிறுவர்களும், அந்தச் சமயத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 2 சிறுவர்களும் என மொத்தம் 5 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்த மற்றொரு சிறுவன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்தும் சட்டவிரோதப் பந்தயம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.