தாய்லாந்தில் சுற்றுலாப் பயணிகளைக் கடத்தி சித்ரவதை - 5 இந்தியர்கள் கைது!

 

குறைந்த செலவில் சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி இந்திய இளைஞர்களைத் தாய்லாந்திற்குக் கடத்திச் சென்று, அவர்களைக் கட்டிவைத்துச் சித்ரவதை செய்து பணம் பறிக்க முயன்ற 5 இந்தியர்களைத் தாய்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த மோஹித் (23), ஆசிஷ் (24) மற்றும் ஹிமான்ஷு (20) ஆகிய 3 இளைஞர்கள் "குறைந்த செலவில் 7 நாட்கள் சுற்றுலா" என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தைப் பார்த்துத் தாய்லாந்து சென்றனர். தாய்லாந்து சென்றடைந்ததும், மர்ம நபர்கள் மூவரையும் பட்டயா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தனர். அங்கு அவர்களின் கை, கால்களைக் கட்டி வைத்து அடித்து கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கினர்.

கடத்தப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், தலா ₹40 லட்சம் வீதம் மொத்தம் ₹1.20 கோடி பணம் தந்தால் மட்டுமே அவர்களை விடுவிப்பதாக மிரட்டியுள்ளனர். இளைஞர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், இந்தியத் தூதரக உதவியுடன் தாய்லாந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் இளைஞர்களின் குடும்பத்தினருக்கு வீடியோ கால் மூலம் மிரட்டல் விடுத்தனர். அதில் இளைஞர்கள் காயங்களுடன் கட்டப்பட்ட நிலையில் இருந்தனர்.

வீடியோ காட்சிகள் மற்றும் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில், பட்டயா பகுதியில் உள்ள 2 மாடி குடியிருப்பில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 இளைஞர்களையும் தாய்லாந்து போலீசார் அதிரடியாக மீட்டனர். போலீசாரின் விசாரணையில், முகத்தில் ரத்தம் வழிவது போல் காட்டுவதற்காகக் கடத்தல்காரர்கள் சிவப்பு நிறச் சாயத்தைப் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக பாங்காக்கில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த அவதார் சிங் (38), ஜக்ஜித் சிங் (38), ராம்பலக் குமார் (24), சுக்பிர் சிங் (37) மற்றும் குல்ரா சிங் (27) ஆகிய 5 இந்தியர்களைப் போலீசார் கைது செய்தனர். இந்தக் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் ஒரு பாகிஸ்தானியர் என்றும், சமூக வலைதளம் மூலமாகவே இத்திட்டம் தீட்டப்பட்டதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இத்திட்டம் துபாயில் இருந்து இயக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீட்கப்பட்ட 3 இளைஞர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தங்களைப் போலவே மற்றொரு இந்திய இளைஞரையும் கடத்தி வைத்து, அவரது குடும்பத்தினர் ₹30 லட்சம் கொடுத்த பிறகே அவரை விடுவித்ததாக மீட்கப்பட்ட இளைஞர்கள் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.