சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 2 செவிலியர் உட்பட 5 பேர் உயிரிழப்பு - சவுதி அரேபியாவில் துயரம்!
சவுதி அரேபியாவில் நடைபெற்ற பயங்கர சாலை விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 2 செவிலியர்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 செவிலியர்கள் உள்பட மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விடுமுறை நாளான நேற்று அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட இந்த விபத்து, உயிரிழந்தவர்களின் சொந்த ஊர்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் தைஃப் - ரானியா சாலையில் இக்கோர விபத்து அரங்கேறியுள்ளது. மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் விடுமுறை நாளான நேற்று ஷாப்பிங் செல்வதற்காகத் தனியார் வாகனம் மூலம் சென்றுள்ளனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் 5 பேரும் உயிரிழந்தனர்.
விஜயலட்சுமி ஜெகதீஷ் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஹெப்சிபா தேவமணி, கேரளம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்சிமோல் மேத்யூ மற்றும் ஜோபினா ஜானி, காரை ஓட்டிச் சென்ற சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவரும் இந்த விபத்தில் பலியாகியுள்ளார்.
இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த உள்ளூர் காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு தற்போது ரானியா அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் பணியாற்றி வந்த தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த பெண் செவிலியர்கள் விபத்தில் பலியான செய்தி அவர்களது குடும்பத்தினரையும் உறவினர்களையும் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மூலம் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக அவர்களின் சொந்த ஊர்களுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.