பள்ளி வாகனம் மீது ரயில் மோதி 4 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி - மேற்கு வங்கத்தில் பயங்கரம்!
மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற கார் மீது பயணிகள் ரயில் பயங்கரமாக மோதிய விபத்தில், 4 பள்ளி குழந்தைகள் மற்றும் ஒரு பெரியவர் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள கோவிந்தபூர் பகுதியில் இன்று காலை இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றிற்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு கார் ஒன்று சென்றுள்ளது. கோவிந்தபூர் ரயில்வே கேட் பகுதிக்கு வாகனம் வந்தபோது, அங்குத் தண்டவாளத்தை மூடும் கேட் மூடப்படாமலும், காவலாளி இல்லாமலும் இருந்துள்ளது. இதனைச் சரியாகக் கவனிக்காத கார் ஓட்டுநர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழித்தடத்தில் அதிவேகமாக வந்த பயணிகள் ரயில், எதிர்பாராத விதமாகப் பள்ளி கார் மீது நசுக்கும்படி பயங்கரமாக மோதியது.
இந்த அதிர்ச்சிகரமான விபத்தில் காரின் ஒரு பகுதி முற்றிலும் நொறுங்கியது. இதில் காரில் பயணித்த 4 பள்ளி குழந்தைகள் மற்றும் காரில் இருந்த மற்றொரு நபர் என 5 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும், காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மற்றும் சில மாணவர்கள் பலத்த காயங்களுடன் உயிருக்குத் போராடிக் கொண்டிருந்தனர். விபத்து சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி குழந்தைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்த மாணவர்களுக்கு உயர்தரச் சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.