நிதி நெருக்கடியால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஓட்டல் அறையில் தற்கொலை - ஆந்திராவில் சோகம்!

 

ஆந்திர மாநிலத்தில் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் உடல்நலக்குறைவால் மனமுடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஓட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பலபு சுதாகர் (36), அவரது இரு சகோதரிகள் மற்றும் ஒரு 15 வயது சிறுமி உள்ளிட்ட குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர். கடந்த சில நாட்களாகக் குடும்பத்தில் நீடித்து வந்த கடுமையான நிதி நெருக்கடி மற்றும் தொடர் உடல்நலக் குறைபாடு காரணமாக இவர்கள் மிகுந்த மனவிரக்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்த இவர்கள், நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, அறையில் 5 பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கதவை உடைத்துச் சடலங்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சோகச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.