'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட திமுக கூட்டணியில் 5 கட்சிகள் சம்மதம்?!
2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் சின்னம் தொடர்பான முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இம்முறை கூட்டணிக் கட்சிகள் தங்களது தனிச் சின்னத்தில் போட்டியிடாமல், திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என திமுக தலைமை வலியுறுத்தி வந்த நிலையில், அதற்கு 5 முக்கியக் கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி ஏற்கனவே திமுக சின்னத்தில் போட்டியிட்ட அனுபவம் கொண்டது. இம்முறை திமுக கூட்டணியில் இணைந்துள்ள எஸ்டிபிஐ கட்சி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடச் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிமுன் அன்சாரி தலைமையிலான மனிதநேய ஜனநாயக கட்சியும் உதயசூரியன் சின்னத்திலேயே களம் காண முடிவு செய்துள்ளது. நடிகர் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை கட்சி, தென் மாவட்டங்களில் திமுகவின் வெற்றியை உறுதி செய்ய உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது. தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவை கட்சியும், கொங்கு மண்டலத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடச் சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.
புதிய அல்லது குறைவாக அறியப்பட்ட சின்னங்களைக் காட்டிலும், பட்டிதொட்டியெங்கும் தெரிந்த 'உதயசூரியன்' சின்னம் வாக்காளர்களிடையே எளிதில் சென்றடையும் என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவது, அக்கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதோடு, ஒட்டுமொத்த வாக்கு சதவீதத்தையும் அதிகரிக்க உதவும் என திமுக தலைமை கணக்கு போடுகிறது.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாத சிறிய கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்க இது ஒரு எளிய வழியாகும். இந்த 5 கட்சிகள் தவிர, கூட்டணியில் உள்ள மதிமுக மற்றும் விசிக ஆகிய கட்சிகள் தங்களது தனிச் சின்னத்திலேயே போட்டியிட விரும்புவதாகத் தெரிகிறது. அதேபோல், இம்முறை கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதையே கௌரவமாகக் கருதுகின்றன.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, அவர்களுக்குச் சுமார் 28 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அவர்கள் எப்போதும் போலத் தங்களது 'கை' சின்னத்திலேயே போட்டியிடுவார்கள்.