undefined

 அடுத்த அதிர்ச்சி... கார் மீது லாரி மோதி கோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

 
 

இன்று அதிகாலையில் மதுரையில் லேடீஸ் ஹாஸ்டலில் பிரிட்ஜ் வெடித்து 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், அடுத்த அதிர்ச்சியாக பரங்கிப்பேட்டை அருகே கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ள நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அன்வர் (56). இவரது உறவினர் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக துபாயில் இருந்து அழைத்துவரப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவரைப் பார்ப்பதற்காக முகமது அன்வர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

சென்னையில் சிகிச்சை பெற்று வருபவரை பார்த்து நலம் விசாரித்து விட்டு மீண்டும் அனைவரும் காரில் ஊருக்கு திரும்பிச் சென்றுக் கொண்டிருந்தனர். காரை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கருப்பூரைச் சேர்ந்த யாசர் அராபத் (38) என்பவர் ஒட்டிச் சென்றார். காரில் நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஹாஜிரா பேகம் (65), திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஹராபத் நிஷா (27) அவரது குழந்தை அப்னான் (3) ஆகியோர் பயணம் செய்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில், சிதம்பரம் அருகே உள்ள பு.முட்லூர் மேம்பாலத்தின் அருகே கார் சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், நேருக்கு நேராக கார் மீது மோதியது. 

இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்துக் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பரங்கிப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காரில் இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரைப் போலீசார் தேடி வருகின்றனர்.