5 வயதில் யோகா டீச்சர்! அமெரிக்க சிறுமி கின்னஸ் உலக சாதனை... விண்வெளியில் யோகா செய்ய ஆசை!
அமெரிக்கா: வெறும் 5 வயதில் யோகா ஆசிரியராகி கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்க சிறுமி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளார்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் பகுதியைச் சேர்ந்தவர் பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ். இவர் 5 வயது 337 நாட்களில் பெரியவர்களுடன் இணைந்து 200 மணி நேர சான்றளிக்கப்பட்ட யோகா ஆசிரியர் பயிற்சிப் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இதன் மூலம் உலகின் மிக இளம் வயது பெண் யோகா ஆசிரியர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
தற்போது 6 வயதாகும் பீனிக்ஸ், கின்னஸ் உலக சாதனை 2027 புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார். அவரது யோகா பயணம் பிறந்த சில மாதங்களிலேயே தொடங்கியுள்ளது. யோகா ஆசிரியரான அவரது தாய் சிட்னி ஹிக்ஸுடன் இணைந்து 3 மாத குழந்தையாக இருந்தபோதே ‘மம்மி அண்ட் மீ’ யோகா வகுப்புகளில் பங்கேற்கத் தொடங்கினார்.
4 வயதிற்குள் மேம்பட்ட யோகா ஆசனங்களைச் செய்யும் அளவுக்கு பயிற்சி பெற்ற பீனிக்ஸ், பின்னர் யோகாவின் உடற்கூறியல் தொடர்பான பாடங்களையும் கற்றுக்கொண்டார். யோகா குறித்து கட்டுரைகள் எழுதுவதுடன், தினசரி பயிற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.தற்போது தனது தாயுடன் இணைந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு யோகா வகுப்புகளையும் நடத்தி வருகிறார். யோகா ஆசனங்களைச் செய்வதில் சிரமப்படும் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில் பீனிக்ஸ் அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்.
பீனிக்ஸின் இந்த சாதனை குறித்து அவரது தாய் சிட்னி பெருமிதம் தெரிவித்துள்ளார். யோகா மூலம் குழந்தைகள் மற்றும் சமூகத்தில் அமைதி, விழிப்புணர்வு ஆகியவற்றை உருவாக்கும் வகையில் தனது மகள் செயல்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.இளம் வயதிலேயே யோகாவில் சாதனை படைத்துள்ள பீனிக்ஸுக்கு எதிர்காலத்திலும் பெரிய கனவு உள்ளது. விண்வெளி வீரராகி, விண்வெளியில் யோகா செய்யும் முதல் நபராக வேண்டும் என்பதே தனது லட்சியம் என அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு மிகவும் பிடித்த யோகாசனம் ‘விருக்ஷாசனம்’ ஆகும்.