லாவணி நடனத்தில் 5,000 பெண்கள் நடனமாடி கின்னஸ் சாதனை!
மகாராஷ்டிரா மாநிலத்தின் பாரம்பரியக் கலை வடிவமான லாவணி நடனத்தில், சந்திராப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இணைந்து ஒரு பிரம்மாண்டமான கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளனர். சந்திராப்பூரில் நடைபெற்ற இந்தப் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி, மகாராஷ்டிராவின் கலாச்சார அடையாளத்தை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது. மொத்தம் 5,000 பெண்கள் ஒரே இடத்தில் திரண்டு வெறும் 20 நிமிட கால இடைவெளியில், 20 வெவ்வேறு லாவணி பாடல்களுக்கு ஒருங்கிணைந்து நடனமாடினர். இதற்கு முன்பு 1,326 பெண்கள் பங்கேற்றதே கின்னஸ் சாதனையாக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கையை ஏறத்தாழ இருமடங்காக்கி சந்திராப்பூர் பெண்கள் புதிய சரித்திரம் படைத்துள்ளனர்.
லாவணி என்பது மகாராஷ்டிராவின் நாட்டுப்புறக் கலைகளில் மிகவும் முக்கியமானது. தாள இசைக்கு ஏற்ப ஆவேசமாகவும், நளினமாகவும் ஆடப்படும் இந்த நடனம், பெண்களின் வீரத்தையும் அழகையும் வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இந்தப் பிரம்மாண்ட முயற்சி மூலம், மறைந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லவும், உலக அளவில் அங்கீகாரம் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கின்னஸ் சாதனை முயற்சியை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யக் கின்னஸ் குழுவினர் நேரில் வந்திருந்தனர். ஒவ்வொரு பங்கேற்பாளரும் முறையாகப் பயிற்சி பெற்று, துல்லியமான தாள லயத்துடன் ஆடியதை அவர்கள் உறுதி செய்தனர். சந்திராப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் கலாச்சார அமைப்புகள் இணைந்து இந்த மாபெரும் நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தன.