தமிழகத்தில் 5,00,000 முதியோர்கள் பாதிப்பு... செப்டம்பர் மாதத்திற்கான பென்ஷன் தாமதம்.. பண்டிகை காலத்தில் பெரும் அவதி - வெளியான முக்கியத் தகவல்!

 

தமிழ்நாட்டில் முதியோர் மாதாந்திர ஓய்வூதியம் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் முதியவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 60 வயதைக் கடந்த ஆதரவற்ற முதியவர்கள், கணவனை இழந்த பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்காலத்தில் இத்தொகை ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டு, நேரடியாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் இத்தொகை வழங்கப்படுவது வழக்கம்.

விழுப்புரம், கரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செப்டம்பர் மாதத்திற்கான ஓய்வூதியத் தொகை இதுவரை வரவு வைக்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர் விடுமுறைகள் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை போன்ற காரணங்களால் பணம் செலுத்தும் நடைமுறை மேலும் தாமமாகியுள்ளது. மேலும், சாப்ட்வேர் மாற்றும் பணி நடைபெற்று வருவதால் ஒரே கட்டமாகப் பணத்தைச் சரிபார்ப்பதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியோர் ஓய்வூதியத் தொகை தாமதமானாலும், வரும் 15-ஆம் தேதிக்குள் அனைத்துப் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளிலும் பணம் வரவு வைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பண்டிகைக் காலத்தில் உதவித்தொகை கிடைக்காமல் தவித்து வரும் முதியவர்களுக்கு இச்செய்தி சற்று ஆறுதலைத் தந்துள்ளது.