ஒரே நாளில் 53 லட்சம் சிலிண்டர் விநியோகம்... தட்டுப்பாடு வராது என மத்திய அரசு அதிரடி உறுதி!
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலிலும், இந்தியாவில் எரிபொருள் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி சீராக நடைபெறுவதை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் யாரும் அச்சமடைந்து பெட்ரோல், டீசல் அல்லது சமையல் எரிவாயுவை அளவுக்கு அதிகமாக வாங்கிச் சேமிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுத் திறனுடன் இயங்கி வருவதால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 53.5 லட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகளுக்கான குழாய் வழி எரிவாயு மற்றும் வாகனங்களுக்கான எரிவாயு விநியோகம் 100 சதவீதம் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாக அரசு உறுதி அளித்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், இந்திய நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாய் வரை மத்திய அரசு குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
எரிபொருள் விநியோகம் தடையின்றி நடைபெறுவதைக் கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளுக்கும் தேவையான எரிபொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் விநியோகச் சங்கிலியில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் விலை மாற்றம் ஏற்பட்டாலும் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.