5,500 பேர் பலி; 11,000 பேருக்குத் தொற்று உறுதி - காங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ்!
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொற்று கண்டறியப்பட்ட நாளிலிருந்து இதுவரை 5,500 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 11 ஆயிரம் பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கோவில் இதற்கு முன்பும் பலமுறை எபோலா பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும், இந்த முறை ஏற்பட்டுள்ள தொற்று மற்றும் உயிரிழப்பு விகிதம் முந்தைய அனைத்துச் சாதனைகளையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது. கடந்த 2018-2020-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பரவலின்போது 3,481 பேருக்குத் தொற்று ஏற்பட்டு, 2,299 பேர் பலியானார்கள். ஆனால், தற்போதைய பரவல் அந்த எண்ணிக்கையை மிகக் குறுகிய காலத்திலேய முறியடித்து விட்டது. இம்முறை பரவும் எபோலா தொற்றுக்கு 'பண்டிபக்யோ' என்ற வைரஸ் வகைதான் காரணம் என மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
தொடரும் இந்த ஆபத்தான பரவலைக் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு உலக சுகாதார அவசரநிலை பிரகடனத்தை வெளியிட்டுள்ளது. நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, காங்கோ நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ள அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தற்காலிகத் தடைகளை விதித்துள்ளன.
காங்கோவைத் தாண்டி கென்யா, உகாண்டா மற்றும் நைஜீரியா ஆகிய அண்டை நாடுகளுக்கும் இந்தப் பாதிப்பு தற்போது பரவியுள்ளது மருத்துவ உலகிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
கடந்த 2014-2016 ஆண்டுகளில் கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோன் நாடுகளில் எபோலா பரவியபோது 28,600 பேர் பாதிக்கப்பட்டு 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, உலக அளவில் பதிவாகியுள்ள 2-வது மிகக்கொடிய எபோலா பரவலாக தற்போதைய காங்கோ தொற்று நிலை பார்க்கப்படுகிறது.