சென்னையில் கேட்பாரற்று கிடந்த 5543 வாகனங்கள்... மின்னணு முறையில் ஏலம் விடப்பட்டன!

 

சென்னை மாநகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கேட்பாரற்று கிடந்து கைப்பற்றப்பட்ட வாகனங்கள், முதல்கட்டமாக மின்னணு முறை மூலம் ஏலம் விடப்பட்டுள்ளன.

சென்னை நகரில் பல்வேறு இடங்களில் கேட்பாரற்று சாலையில் கிடந்த வாகனங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். அவ்வாறு கண்டெடுக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட மொத்தம் 5,543 வாகனங்கள் சென்னை மாநகராட்சி மூலம் ஏலம் விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, மதிப்பீடு செய்யப்பட்ட 1,936 வாகனங்கள் முதல்கட்டமாக மின்னணு முறையில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 3,607 வாகனங்களும் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு, அடுத்தடுத்த கட்டங்களில் ஏலத்தில் விடப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 81 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 12 ஆட்டோக்கள் உட்பட மொத்தம் 102 வாகனங்களும், நீதிமன்றத்தின் முறையான அனுமதியைப் பெற்று விரைவில் மின்னணு வாயிலாக ஏலம் விடப்படவுள்ளன.