தென்காசியில் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை... மாநகராட்சி பொறியாளர் கைது!
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், கோவை மாநகராட்சியின் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பொறியாளரைக் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்சாமி பீட்டர் (வயது 59). இவர் கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். சில நிர்வாகக் காரணங்கள் மற்றும் முறைகேடு புகார்கள் காரணமாக இவர் சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பால்சாமி பீட்டர் தனது சொந்த ஊரான வாசுதேவநல்லூருக்கு வந்து தங்கியுள்ளார்.
சொந்த ஊரில் தங்கியிருந்த போது, அப்பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பால்சாமி பீட்டர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இக்கொடூரச் செயலால் பாதிக்கப்பட்ட சிறுமி அழுதுகொண்டே நடந்த விவரங்களைத் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாகத் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போக்சோ வழக்கு: புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் இந்திரா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பால்சாமி பீட்டரை அதிரடியாகக் கைது செய்தார். கைது செய்யப்பட்ட பால்சாமி பீட்டரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் அவரைப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். அரசுப் பணியில் உள்ள ஒருவர் இது போன்ற பச்சிளம் சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.