கோவை ஒப்பணக்கார வீதியில் ஆடிட்டர் வீட்டில் வெள்ளி, பித்தளைப் பொருட்கள் கொள்ளை - 6 பேர் கைது!
கோவை ஒப்பணக்கார வீதியைச் சேர்ந்த ஆடிட்டர் சேஷகிரி (70), தனது மகனைப் பார்ப்பதற்காக பெங்களூரு சென்றிருந்தபோது அவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
வீட்டில் ஆள் இல்லாததைச் சாதகமாகப் பயன்படுத்தி உள்ளே நுழைந்த கும்பல், அங்கு வைக்கப்பட்டிருந்த 9 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 7 கிலோ பித்தளைப் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளது. இவற்றுள் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் கோவையைச் சேர்ந்த வெங்கடேஷ் (45), ராஜசேகர் (37), டேவிட் லிவிங்ஸ்டன் (56), மணிகண்டன் (26), மணிகண்டன் (27), மற்றும் ஜமீசா (45) ஆகிய 6 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்கள் அனைத்தும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.