தமிழகத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகள் காலியானது - விரைவில் இடைத்தேர்தல்!
தமிழகத்தில் தற்போது 6 சட்டமன்றத் தொகுதிகள் காலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்தத் தொகுதிகளுக்கு மிக விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகளால் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் கடந்த தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில், அவர் தனது திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ பதவியை முறைப்படி ராஜினாமா செய்துவிட்டு, பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வாகத் தொடர்ந்து வருகிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அக்கட்சியைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்தனர். அதன்படி மதுராந்தகம் (மரகதம் குமரவேல்), தாராபுரம் (சத்தியபாமா), பெருந்துறை (ஜெயக்குமார்) மற்றும் அம்பாசமுத்திரம் (இசக்கி சுப்பையா) ஆகிய 4 தொகுதிகள் காலியாகின.
இந்நிலையில், இன்று அதிமுகவின் முக்கியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் தனது விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உடனடியாக ஏற்றுக்கொண்டு அறிவித்ததைத் தொடர்ந்து, காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, ஒரு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதன்படி, ஏற்கனவே காலியாக அறிவிக்கப்பட்ட 5 தொகுதிகளுடன் சேர்த்து தற்போது ஆறாவதாக இணைந்துள்ள விராலிமலை தொகுதிக்கும் சேர்த்து, வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.