அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 நர்ஸ் உட்பட 6 பேர் காயம் - தெலங்கானாவில் அதிர்ச்சி!

 

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்த விபத்தில் நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் உள்நோயாளிகளாகவும் வெளிநோயாளிகளாகவும் தங்கிச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையின் ஒரு பகுதியில் பலகைகளால் அமைக்கப்பட்டிருந்த பழைய மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 நோயாளிகள் மற்றும் பணியில் இருந்த 2 செவிலியர்கள் உள்பட மொத்தம் 6 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த 6 பேருக்கும் உடனடியாக அருகில் இருந்த மருத்துவர்கள் மூலமாக முதலுதவி மற்றும் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பழமையான இந்த மருத்துவமனை கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்தும், மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் தொடர்பாகவும் துறைசார்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.