மதுரை ஆம்னி பேருந்து விபத்தில் 6 பேர் பலி - முதலமைச்சர் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

 

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே இன்று அதிகாலை தனியார் ஆம்னி பேருந்தும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் முதலமைச்சர் விஜய் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, உடனடியாக நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

சென்னையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து ஒன்று, இன்று அதிகாலை மதுரை திருச்சி நான்கு வழிச்சாலையில் கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சிநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து, எதிர்பாராதவிதமாகச் சாலையின் நடுவே உள்ள தடுப்பைத் தாண்டி எதிர்புறச் சாலைக்குக் பாய்ந்தது.

அதே நேரத்தில் மதுரையிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்து மீது அந்த ஆம்னி பேருந்து அதிவேகமாக நேருக்கு நேர் மோதியது. இந்த மோதலின் தாக்கத்தால் ஆம்னி பேருந்தின் முன்பகுதி முற்றிலும் நசுங்கியதுடன், அரசுப் பேருந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது. விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடிவந்த உள்ளூர் மக்கள் மற்றும் போலீசார் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வஞ்சிநகரைச் சேர்ந்த பெருமாள் (71) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் மேலூர் மற்றும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் துயரச் செய்தி குறித்துத் தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விபத்தில் சிக்கி உயிரிழந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூபாய் 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். தீவிரப் பிரிவில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 7 நபர்களுக்குத் தலா ரூபாய் 1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் 15 நபர்களுக்குத் தலா ரூபாய் 50,000 நிதியுதவி வழங்கப்படும்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் உயர்தரச் சிறப்புச் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும் மருத்துவக் குழுவினருக்கும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தார். இச்சம்பவம் குறித்துக் கொட்டாம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.