ரூ.36,000 கோடி மதிப்பிலான 6,000 கிலோ போதைப்பொருள் கடத்தல்.. சென்னை, மதுரை உட்பட 13 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!
சர்வதேச அளவில் சுமார் 36,000 கோடி ரூபாய் மதிப்பிலான 6,000 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில், தேசிய புலனாய்வு முகமை சென்னை மற்றும் மதுரையில் உள்ள 13 இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.
சம்பவம் நவம்பர் 2024ல் அந்தமான் தீவுகள் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் பயணித்த மியான்மர் நாட்டைச் சேர்ந்த படகு ஒன்றை இந்தியக் கடலோரக் காவல் படையினர் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டனர். அந்தச் சோதனையில், சுமார் 36,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 6,000 கிலோ 'மெத்தம்பெட்டமைன்' என்ற கொடிய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாகப் படகில் இருந்த 7 பேர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வழக்கின் தொடர் விசாரணையாக, நேற்று சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் உள்ள 13 முக்கிய இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ₹71 லட்சம் ரொக்கம், 53,500 அமெரிக்க டாலர்கள் மற்றும் 1.5 லட்சம் மியான்மர் கியாட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிஜிட்டல் கருவிகள் மற்றும் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் கருவிகள் அனைத்தும் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.