மசாஜ் செய்வதாக கூறி 61 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்... ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி நபருக்கு சிறை தண்டனை!

 

ஆஸ்திரேலியாவில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வரும் டெல்லியைச் சேர்ந்த 39 வயது இந்திய வம்சாவளி நபரான சுமித் சதீஷ் ரஸ்தோகி என்பவர் அங்குள்ள அடிலெய்டு பகுதியில் மசாஜ் செய்பவராகப் பணிபுரிந்து வந்தார்.

இவர் தன்னிடம் மசாஜ் செய்ய வந்த 61 பெண்களை ஏமாற்றி அவர்களிடம் மோசமான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர்கள் அரைகுறை ஆடையுடன் இருந்த சமயத்தில் அவர்களுக்குத் தெரியாமல் தவறான முறையில் அவர்களை ஆபாசமாக புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் கடந்த 2022 ஆம் ஆண்டில் கைதான சுமித் மீது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அவர் 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 55 முறை பெண்களைத் தவறாகப் படம் பிடித்ததும் 42 முறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் விசாரணையில் நிரூபிக்கப்பட்டது. இந்தச் செயலால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் தங்களது வாழ்க்கையில் நிம்மதியை இழந்து கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த வழக்கை விசாரித்த பெண் நீதிபதி கார்மென் மேத்யூ குற்றவாளியான சுமித் சதீஷ் ரஸ்தோகிக்கு 13 ஆண்டுகள் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும் சிறை தண்டனைக் காலம் முடிந்த பின்னர் அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து நிரந்தரமாகத் தனது சொந்த நாட்டுக்குத் நாடுகடத்தப்படுவார் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் இந்திய வம்சாவளி நபர் செய்த இந்த வெட்கக்கேடான செயல் அங்கிருந்த மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.