61.84 லட்சம் மாணவர்களுக்கு ஸ்விஸ் ரோல் கேக்... பள்ளிக்கல்வித் துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு!

 

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 61.84 லட்சம் பேருக்குக் கேக் விநியோகிப்பது தொடர்பாகத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

நவம்பர் 14 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், குழந்தைகள் தின விழா நவம்பர் 13-ஆம் தேதியே பள்ளிகளில் விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும் தலா 25 கிராம் எடையுள்ள 2 மினி ஸ்விஸ் ரோல் கேக்குகள் வழங்கப்படும்.

கேக்குகள் வைக்கப்படும் இடங்கள் மிகவும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். கேக் பாக்கெட்டுகளில் கட்டாயம் விற்பனைக்கு அல்ல என்ற வாசகம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

உணவு ஒவ்வாமை  அல்லது உணவுக் கட்டுப்பாடு உள்ள மாணவர்களை ஆசிரியர்கள் முன்கூட்டியே கண்டறிந்து, அவர்களுக்குத் தகுந்த மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மாணவர்கள் கைகளைக் கழுவிய பிறகே கேக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். விநியோகம் எந்தவிதக் குழப்பமுமின்றிச் சீராக நடைபெற வேண்டும்; எந்தவொரு மாணவரும் விடுபடக் கூடாது.

விழா நாளில் பள்ளிக்கு வர இயலாத மாணவர்களுக்கான கேக்குகளைப் பாதுகாப்பாக வைத்து, அவர்கள் பள்ளிக்கு வரும் அடுத்த நாளில் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து மாணவர்களுக்கும் தமிழக அரசின் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் அடங்கிய வாழ்த்து அட்டை சென்று சேர்வதையும் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனப் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.