மின்சார வாரியத்தில் 65,921 காலிப்பணியிடங்கள் - புள்ளிவிவரங்களை வெளியிட்டார் அமைச்சர் நிர்மல்குமார்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 21 ஆண்டுகால வெள்ளை அறிக்கையை இன்று காலை சென்னையில் வெளியிட்ட மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், மின்சார வாரியத்தில் நிலவி வரும் ஊழியர் பற்றாக்குறை குறித்த துல்லியமான மற்றும் அதிர வைக்கும் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் தற்பொழுது 50% ஊழியர்களை மட்டுமே கொண்டு மிகக் கடுமையான பணிச்சுமையோடு இயங்கி வருவதை அமைச்சரின் இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த மனிதவளத் தேவை மற்றும் தற்போது உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சீரான செயல்பாட்டிற்கு ஒட்டுமொத்தமாக 1,40,635 ஊழியர்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய நிலவரப்படி மின்சார வாரியத்தில் 65,921 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த கால ஆட்சிகளில் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படாததே இந்த அளவிற்குப் பற்றாக்குறை அதிகரிக்கக் காரணம் என்று அமைச்சர் குற்றம் சாட்டினார். கடந்த 2021 முதல் 2026 வரையிலான 5 ஆண்டுகால முந்தைய திமுக ஆட்சியில், இவ்வளவு பெரிய அளவில் காலிப்பணியிடங்கள் இருந்தபோதிலும் வெறும் 343 பேர் மட்டுமே புதிய பணியாளர்களாக வேலைக்குச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மின்வாரியத்தில் தற்பொழுது பணியாற்றி வருபவர்களில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மேலும் 16,782 பேர் பணி ஓய்வு பெற உள்ளதாக அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார். இதனால் ஊழியர் பற்றாக்குறை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மின்சார வாரியத்தில் நிலவி வரும் இந்த 65,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடப் பிரச்சினையைச் சரி செய்யத் தற்போதைய தவெக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் முதற்கட்டமாக, நடப்பு 2026-ஆம் ஆண்டிற்குள்ளாகவே மின்சாரத் துறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 20,000 புதிய பணியாளர்கள் வேலைக்குச் சேர்க்கப்படுவார்கள் என்றும், முந்தைய ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5,000 கேங் மேன்களும் விரைவில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஆண்டில் மின் கட்டண உயர்வு எதுவும் இருக்காது என்ற நிம்மதியான அறிவிப்போடு, மின்சார வாரியத்தின் இமாலய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தவெக அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகள் வேலை தேடும் தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.