கர்ப்பிணி எருமை மாட்டின் வயிற்றில் இருந்து 66 உலோகப் பொருட்கள் அகற்றம்!
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில், 9 மாத கர்ப்பமாக இருந்த எருமை மாடு ஒன்றின் வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் 66 உலோகப் பொருட்கள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில், உனா பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த 9 மாத கர்ப்பிணி எருமை மாடு ஒன்று, அப்பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் மேய்ந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த ஆபத்தான பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளோடு சேர்த்து உலோகப் பொருட்களையும் தவறுதலாக உட்கொண்டுள்ளது. தொடர்ந்து வயிற்று வலியால் அவதியுற்ற அந்த மாட்டை, அதன் உரிமையாளர் உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மாட்டைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள், அதன் வயிற்றில் பெருமளவில் உலோகப் பொருட்கள் இருப்பதை அல்ட்ராசவுண்ட் மற்றும் எக்ஸ்-ரே சோதனைகள் மூலம் கண்டறிந்தனர்:
மாட்டின் நிலையைக் கருத்தில் கொண்டு, மருத்துவர்கள் குழு உடனடியாகச் தீவிர அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. சுமார் 66 கூர்மையான மற்றும் ஆபத்தான உலோகப் பொருட்களை மாட்டின் வயிற்றில் இருந்து வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்தனர். கர்ப்பிணியாக இருக்கும் அந்த எருமை மாட்டின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அதைத் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைத்துப் பராமரிக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
குப்பைக் கிடங்குகளில் பிளாஸ்டிக் மற்றும் கூர்மையான கழிவுப் பொருட்களை திறந்தவெளியில் கொட்டுவதால் விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து இச்சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.