திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 7 கார்கள் மோதி விபத்து - கடும் போக்குவரத்து நெரிசல்!
செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த தொடர் விபத்தால் கார்களில் பயணித்தவர்கள் லேசான காயங்களுடன் தப்பியதுடன், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அருகே உள்ள புலிப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென பாய்ந்து பிரேக் பிடித்ததால், அதன் பின்னால் வந்த மற்ற கார்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதிக் கொண்டன.
இந்த கோர விபத்தில் கார்களில் பயணம் செய்த பலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாகத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ச்சியாக 7 கார்கள் மோதியதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.