தமிழகத்தில் 7 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! குடிமகன்கள் அதிர்ச்சி!!
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் இம்மாதத்தில் 7 நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்பதால் வழக்கத்தை விட, ஊரடங்கு பயத்தில் குடிமகன்கள் அதிகளவில் வாங்கி இருப்பு வைக்கத் துவங்கியுள்ளனர். டாஸ்மாக் கடைகள் விடுமுறை குறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் சுற்றரிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 18ம் தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26ம் தேதி குடியரசு தினம் என்பதால், மேற்கண்ட நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.
இந்த நாட்களில், அனைத்து டாஸ்மாக் கடைகள், அரசு உரிமம் பெற்ற பார்களை கடை மேற்பார்வையாளர்கள் பூட்டி ‘சீல்’ வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. இம்மாதம் 9ம் தேதி, 16ம் தேதி, 23 மற்றும் 30 ம் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. இதனால், இம்மாதத்தில் மொத்தம் 7 நாட்கள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும். இதனால் வழக்கத்தை விட டாஸ்மாக் கடைகளில் நேற்றைய தினத்தில் இருந்தே குடிமகன்கள் அதிகளவில் வாங்கி இருப்பு வைக்க துவங்கியுள்ளனர்.