கோவில் மேற்கூரை சரிந்து விழுந்து 7 பேர் உடல் நசுங்கி பலி... நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

 

மராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள யஷ்வாடி கிராமத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோவிலில் கடந்த சில நாட்களாகப் பல்வேறு புதிய கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இப்படியிருக்கையில் இன்று  பிற்பகல் கோவிலின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சபா மண்டபத்தின் பிரம்மாண்ட மேற்கூரையானது  திடீரென பயங்கரமாக இடிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தின் போது கோவிலில் வழிபாட்டிற்காகக் கூடி நின்ற சுமார் 20 பக்தர்கள் அந்த இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என  அஞ்சப்படுகிறது.

இந்த விபரீத சம்பவத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 6 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியாகி இருப்பதாக  முதற்கட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும் வந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்களது மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுப் பர்பானி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அவசரச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்துத் தகவல் தெரிவித்த காவல் துறை உயர் அதிகாரி, கோவிலின் சபா மண்டப மேற்கூரையானது  திடீரென இடிந்து விழுந்ததாகத் தெரிவித்துள்ளார். தற்பொழுது காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆன்மீகக் கோவிலில் சாமி கும்பிட வந்த பக்தர்கள் மேற்கூரை இடிந்து பலியான சம்பவம், அந்த மாநில பொதுமக்கள்  மத்தியில் மிகப்பெரிய சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது