கட்டுமானப் பணியின்போது சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி - அரியானாவில் அதிர்ச்சி!

 

ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே சித்ராவலி பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட மண் சரிவு மற்றும் சுவர் இடிந்த விழுந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சித்ராவலி கிராமத்தில் உள்ள சிக்னேச்சர் குளோபல் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தின் குடியிருப்பு வளாகத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. நேற்று இரவு சுமார் 7 மணியளவில், தொழிலாளர்கள் தரைதளத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, திடீரென ஒரு பக்கச் சுவர் இடிந்து விழுந்ததுடன், அதன் மேலிருந்த பெருமளவிலான மண்ணும் சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் ஜார்கண்ட் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்களில் 4 முதல் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, ராஜஸ்தான் மாநிலம் பிவாடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது.

தகவலறிந்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் விரைந்து வந்து, அதிகாலை 3:30 மணி வரை மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ராட்சத எந்திரங்கள் மூலம் மண் அகற்றப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டன. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முறையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததே இந்த விபத்திற்குக் காரணம் எனப் பலியான தொழிலாளர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கட்டுமான நிறுவனம் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை.