கோர விபத்து: பேருந்து - கார் மோதி தீப்பிடித்ததில் 7 பேர் உயிரிழப்பு!

 

கர்நாடக மாநிலம் யாத்கிர் மாவட்டம் தேவாபூர் அருகே இன்று நடந்த கோர விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பெங்களூருவில் இருந்து கலபுரகி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும், ராய்ச்சூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தின் கோரத்தினால் அடுத்த சில நிமிடங்களிலேயே கார் மற்றும் பேருந்து என இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

கார் முற்றிலுமாகத் தீயில் சிக்கியதால், அதில் பயணித்த 7 பேரும் வெளியே வர முடியாமல் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்தபடி ஜன்னல் வழியாகக் குதித்து உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர். தற்போது பேருந்தும் காரும் எலும்புக்கூடாகக் காட்சியளிக்கின்றன.

காயமடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து யாத்கிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதிவேகமாக வந்ததே விபத்திற்குக் காரணமா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.