தமிழக மீனவர்கள் 7 பேர் கைது... நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை அட்டூழியம் - விசைப்படகுகளும் பறிமுதல்!
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் வகையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். அவர்களின் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நேற்று காலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மீனவர்களைச் சிறைபிடித்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் கீழ் மன்னார் கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு விசாரணைக்குப் பிறகு, அவர்கள் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் இதுவரை பலமுறை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, நேற்று முன்தினம் தான் இலங்கை நீதிமன்றம் இரண்டு தமிழக மீனவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய விடுதலையை வழங்கியிருந்தது. இந்தச் சூழலில், மீண்டும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளது ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம் பகுதி மீனவக் குடும்பங்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் மீட்க வேண்டும் என மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.