கோவையில் 70 ஆண்டுகளாகச் செயல்படும் சிமெண்ட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு; பொதுமக்கள் போராட்டம்!

 

கோவை மதுக்கரையில் செயல்பட்டு வரும் ஏ.சி.சி சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சுவாசப் பிரச்சினைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையம், மேட்டாங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் ஏ.சி.சி சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் புகை மற்றும் சாம்பல் துகள்கள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் தடிமனாகப் படிந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மாசினால் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு மூச்சுத்திணறல், தொடர் இருமல், கண் எரிச்சல் உள்ளிட்ட சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியரிடம் ஆதாரங்களுடன் முறையிட்டனர்.

பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர். மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வரை ஆலையை இயக்கக் கூடாது என்றும், விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் ஆலை நிர்வாகத்திற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆலை நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ள அதானி குழுமம், உள்ளூர் தொழிலாளர்களைப் புறக்கணிப்பதாகக் கூறி ஆலைத் தொழிலாளர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.