அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு 10% ஆக உயர்வு? - ஆசிரியர் சங்கம் வரவேற்பு!
தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான தொழில்முறைப் படிப்புகளுக்கான உள் இடஒதுக்கீட்டை 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்த முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உயர்வு குறித்த ஆலோசனைகளுக்குத் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகம் தங்களது முழுமையான வரவேற்பையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது:
"அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்துவது குறித்து முதலமைச்சர் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது" என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை அமலுக்கு வரும் பட்சத்தில், கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மற்றும் கடைநிலையில் உள்ள மாணவர்களின் உயர்கல்விக் கனவு எளிதில் நனவாகும் என்றும், இதன் மூலம் ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ மற்றும் பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேர வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.