சேலத்தில் 7 மாத கர்ப்பிணி கொடூரக் கொலை - 2 வாரங்களாக மாயமான நிலையில், சாக்குமூட்டையில் சடலம் மீட்பு!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காணாமல் போன 7 மாத கர்ப்பிணிப் பெண் சாக்குமூட்டையில் கட்டப்பட்ட நிலையில் விவசாயக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் கோண சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பேராக்கவுண்டர் மகள் கோகிலா (23), கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்துச் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கர்ப்பத்திற்குக் காரணமான கன்னியாம்பட்டியைச் சேர்ந்த அம்மாசி என்பவரை அழைத்து விசாரித்த காவல்துறையினர், கோகிலாவை அவருடன் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பிறகு கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி காலை கோகிலா காணாமல் போய்விட்டதாக அவரது தந்தை பேராக் கவுண்டரிடம் அம்மாசி கூறியுள்ளார். இது குறித்துக் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளாளபுரம் கிராமத்திலுள்ள விவசாய கிணற்றில் சாக்குமூட்டைக் கட்டப்பட்ட நிலையில் சடலம் மிதப்பது குறித்துக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அந்த மூட்டை வெளியே எடுக்கப்பட்டு உறவினர்களைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டதில், அது காணாமல் போன கர்ப்பிணி கோகிலா என்பது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் கோகிலாவின் மரணம் குறித்துத் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார். இதனிடையே உரிய நேரத்தில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கோகிலாவின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.