பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவம் துப்பாக்கி சூடு - 8 பேர் பலி; பலர் படுகாயம்!

 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவி வரும் கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் அடிப்படை உரிமைப் பறிப்புகளுக்கு எதிராகப் பொதுமக்கள் நடத்திய பிரம்மாண்ட பேரணியை ஒடுக்கப் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதால் அங்கு பதற்றம் உச்சமடைந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் சுமார் 35 சதவீதப் பகுதியைத் தன் வசம் வைத்துள்ள பாகிஸ்தான், அதற்கு ஆக்கிரமிப்பு காஷ்மீர் எனப் பெயரிட்டுத் தனியே ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சட்டசபையை அமைத்து நிர்வகித்து வருகிறது. இருப்பினும், அங்கு வாழும் மக்களுக்கு எவ்வித அரசியல் உரிமைகளும் வழங்கப்படாமல், தொடர் மனித உரிமை மீறல்களும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வும் மக்களைக் கடுமையாகப் பாதித்து வருகின்றன.

இவற்றுக்கு எதிராகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 'அவாமி நடவடிக்கை குழு' என்ற மனித உரிமைகள் அமைப்பு தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்காகப் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் தொடர்ந்து அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

நேற்று காலை ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவல்கட் நகரில் இருந்து முசாபர்நகர் நோக்கிப் போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி  பேரணியைத் தொடங்கினர்:

பேரணியானது சனோதி நகர் அருகே வந்த போது, அங்கு முகாமிட்டிருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் போராட்டக்காரர்களை மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். கூட்டத்தைக் கலைக்க முதற்கட்டமாகக் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், கொடூரமான முறையில் தடியடி நடத்தியும் ராணுவத்தினர் கலைக்க முயன்றனர்.

தடியடியையும் மீறிப் போராட்டக்காரர்கள் முன்னேற முயன்றதால், பாகிஸ்தான் ராணுவத்தினர் கூட்டத்தை நோக்கிக் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

ராணுவத்தினர் நடத்திய இந்தத் துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் 8 பேர் குண்டடி பட்டு சம்பவ இடத்திலேயே உடல்கள் சிதறிப் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வரும் நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடிச் சம்பவத்தைத் தொடர்ந்து சனோதி நகர் முழுவதும் போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கப் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் கமாண்டோ படைகள் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முக்கிய நகரங்களில் குவிக்கப்பட்டுள்ளதால், அங்கு கடுமையான பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ராணுவத்தின் இந்த மனிதநேயமற்ற செயலுக்குச் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளன.