சீனாவில் துணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 8 பேர் பலி!
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள துணி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்திற்கு உட்பட்ட ஷன்டே மாவட்டம் ஆடை உற்பத்திக்கான முக்கியப் பகுதியாகும். இங்கு வெளிநாட்டு நிதி உதவி, கூட்டுப் பங்கு மற்றும் தனியார் நிறுவனங்கள் எனப் பல ஆலைகள் இயங்கி வருகின்றன.
ஷன்டே மாவட்டத்தில் குவாங்சவ் பகுதிக்கு 20 கி.மீ. தொலைவில் செயல்பட்டு வரும் துணி தொழிற்சாலையில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில் தீ பரவியதும் தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். எனினும், இந்த விபத்தில் சிக்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு உடனடியாகச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.