சுற்றுலா சென்ற 8 மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு: மகாராஷ்டிராவில் சோகம்!

 

மகாராஷ்டிராவில் கல்விச் சுற்றுலாவாகக் கடற்கரைக்குச் சென்ற தனியார் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் 8 பேர் ராட்சத அலையில் சிக்கிக் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த தனியார் பயிற்சி வகுப்பைச் சேர்ந்த சுமார் 30 முதல் 40 மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாகத் திவேஆகர் கடற்கரைக்குச் சென்றிருந்தனர்.

கடலின் ஆழம் மற்றும் நீரோட்டத்தின் வேகம் குறித்துத் தெரியாமல் மாணவர்கள் கடலில் இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக வந்த ராட்சத அலைகளில் சிக்கி 8 மாணவர்கள் கடலில் மூழ்கினர்.

மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்களும், அப்பகுதி மக்களும் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மாணவர்களின் உடல்களை மீட்டனர்.