வியட்நாம் விபத்தில் 8 தமிழர்கள் பலி; உதவி எண்கள் அறிவிப்பு!

 

வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே நிகழ்ந்த விசைப்படகு விபத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 8 தொழிலதிபர்கள் உயிரிழந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அவசர உதவிகள் மற்றும் தகவல்களை வழங்க வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் இணைந்து அவசர உதவி எண்களை அறிவித்துள்ளன.

விபத்தில் சிக்கிய பயணிகள், தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் பலியானவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு வருவது தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளப் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ள: +84 36 281 7930, +84 91 552 3714, +84 33 452 0414

இந்தியாவில் இருந்து அவசரத் தகவல் அறிய (24/7 ஹெல்ப்லைன்): 1800 309 3793 (கட்டணமில்லாத் தொலைபேசி எண் / Toll-Free)

+91 80 6900 9900, +91 80 6900 9901

பாதிக்கப்பட்ட பயணிகளின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் இந்த எண்களில் எந்நேரமும் தொடர்புகொண்டு தேவையான சட்டப் பூர்வ மற்றும் அவசர உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னணி செல்போன் நிறுவனத்தின் வணிகச் சுற்றுலாவிற்காக வியட்நாமுக்குச் சென்றிருந்த 32 இந்திய விநியோகஸ்தர்கள் பயணித்த படகே, ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவிற்குச் சென்ற போது கடல் சீற்றத்தில் சிக்கிக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் திண்டுக்கல், சேலம், திருச்சி, தருமபுரி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 8 தமிழர்கள் உட்பட மொத்தம் 15 இந்தியர்கள் நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளனர். அவர்களின் உடல்களை மீட்டுத் தமிழகத்திற்கு விரைவாகக் கொண்டு வருவதற்கான வெளியுறவுத் தூதரக நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.