தமிழ்நாட்டில் 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு தற்காலிக உரிமம் - அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் உத்தரவு!

 

தமிழ்நாட்டில் புதிய மருத்துவமனைகளைத் தொடங்குவதற்கும், ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவமனைகளைப் புதுப்பிப்பதற்கும் சமர்ப்பிக்கப்பட்டு, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சுமார் 8,000 தனியார் மருத்துவமனைகளின் விண்ணப்பங்களுக்குத் தற்காலிக அனுமதி வழங்கத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனைகளுக்கான உரிம நடைமுறைகளில் உள்ள காலதாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு இந்த எளிய வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் தங்களின் விபரங்களை அரசிடம் ஆன்லைன் மூலம் சமர்ப்பித்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்தாலே, எவ்வித தாமதமும் இன்றி உடனடியாகத் தற்காலிக உரிமச் சான்றிதழ் வழங்கப்படும்.

ஆய்வுக்குப் பின் நிரந்தரச் சான்றிதழ்: தற்காலிக உரிமம் பெற்று மருத்துவமனைகள் தங்களின் சேவையைத் தொடங்கலாம். அதனைத் தொடர்ந்து, மருத்துவத் துறை அதிகாரிகள் அந்தந்த மருத்துவமனைகளுக்கு நேரடியாகச் சென்று உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து முழுமையான கள ஆய்வு மேற்கொள்வர். விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்ட பின், அவற்றுக்கு நிரந்தரச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

தனியார் மருத்துவமனைகளுக்கான இந்த எளிய உரிம நடைமுறைகளை அறிவித்த வேளையில், மருத்துவச் சேவையின் தரம் குறித்து அமைச்சர் சில முக்கிய அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார். உரிம நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டாலும், மருத்துவச் சேவையின் தரத்தில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது. அனைத்துத் தனியார் மருத்துவமனைகளும் பொதுமக்களுக்குத் தரமான மற்றும் பாதுகாப்பான மருத்துவச் சிகிச்சையை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் உரிய மரியாதையுடன், கனிவான தொனியில் அணுக வேண்டும். மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் குறித்தும் அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் விவரித்துள்ளார்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளைத் தவிர்த்து, பிற மாவட்ட மற்றும் தாலுகா தலைமை மருத்துவமனைகள் அனைத்தும் இணை இயக்குநர்களின் நேரடித் தணிக்கைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. சிகிச்சைக்காக வரும் நோயாளிகளில் 70 சதவீதத்தினர் இத்தகைய அரசு மருத்துவமனைகளையே நாடுகின்றனர். எனவே, "அரசு மருத்துவமனைக்குச் சென்றால் தரமான சிகிச்சை நிச்சயம் கிடைக்கும், மருத்துவர்கள் எந்நேரமும் இருப்பார்கள், வளாகம் தூய்மையாக இருக்கும்" என்ற முழுமையான நம்பிக்கையைப் பொதுமக்களிடம் உருவாக்குவதே புதிய அரசின் முதன்மை இலக்கு என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

உரிமம் கோரி நீண்ட நாட்களாகக் காத்திருந்த சுமார் 8,000 மருத்துவ நிறுவனங்களுக்கு அரசின் இந்தத் தற்காலிக அனுமதி உத்தரவு பெரும் நிம்மதியை அளித்துள்ளதுடன், தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு அடுத்த கட்டத்திற்கு நகரவும் இது வழிவகுக்கும் எனப் பார்க்கப்படுகிறது.