திருப்பதியில் ஒரே நாளில் ₹4.72 கோடி உண்டியல் காணிக்கை - 81,692 பக்தர்கள் தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நிலவி வரும் தொடர் விடுமுறை மற்றும் விசேஷ தினங்கள் காரணமாகப் பக்தர்களின் வருகை பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் திருமலைக்குச் சாதனை அளவாகப் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
திருப்பதி திருமலை தேவஸ்தானம்வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி நேற்று ஒரே நாளில் மொத்தம் 81,692 பக்தர்கள் ஏழுமலையானை நேரில் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் செலுத்திய நேர்த்திக்கடனாகக் கோயிலின் ஸ்ரீவாரி உண்டியலில் மட்டும் ஒரே நாளில் ரூ. 4.72 கோடி ரொக்கப்பணம் காணிக்கையாக வசூலாகியுள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் பக்தர்களின் தேவைக்காக 4.17 லட்சம் திருப்பதி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கோடைக்கால இறுதி மற்றும் அடுத்தடுத்து வரும் விசேஷ நாட்களின் காரணமாகத் திருமலையில் தர்ம தரிசனம் எனப்படும் டோக்கன் இல்லாத இலவச சர்வதரிசனத்திற்குப் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளெக்ஸ் அறைகளையும் தாண்டி, வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். இதனால் பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசிப்பதற்குச் சுமார் 12 மணி நேரம் வரை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காகத் தேவையான குடிநீர், பால் மற்றும் உணவுப் பொருட்களைக் கோயில் நிர்வாகத்தினர் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர்.